கோவில் மனை வாடகை கட்டண உயர்வை 15ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில் மனை வாடகை கட்டண உயர்வை 15ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
ADDED : ஏப் 27, 2025 01:30 AM
சென்னை: ''கோவில் மனை வாடகை கட்டணம், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, 15 சதவீத உயர்வு என்பதை, ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் அளவிற்கு குறைத்து, புதிதாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
தி.மு.க., - ராஜா: சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவில் தங்கத்தேர், தி.மு.க., ஆட்சி அமைந்த பின் தான் சரி செய்யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான சுவாமி மற்றும் அம்மன் தேர்களை, விரைவாக மராமத்து செய்து, திருவிழா பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: சங்கரன்கோவில் தேர் மராமத்து பணி நடந்து வருகிறது. சித்திரை மாத தேரோட்டத்தில் அது வீதியுலா வரும். இந்த ஆட்சி அமைந்த பின், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 119 தேர்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.
மேலும், 64 தேர்கள், 16 கோடி ரூபாய் செலவில் மராமத்து பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளன. தேர் பாதுகாப்பு கொட்டகைகள், 26 கோடி ரூபாய் செலவில், 183 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
தி.மு.க., - ஜோசப் சாமுவேல்: பாடி, மணலுார்பேட்டை, திருவல்லீஸ்வரர் நகர் பகுதிகளில், மக்கள் கோவில் மனைகளில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களிடம் வசூலிக்கப்படும் குத்தகை வாடகை அதிகமாக உள்ளதால், மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அமைச்சர் சேகர்பாபு: ஏற்கனவே, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளனர். சட்டவிதிகளின்படி, நியாயமான வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆட்சி அமைந்த பின், வணிக நிறுவனங்களில், வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் வசூலிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவில் மனைகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களை, எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, கோவில் மனைகளில் வசிப்பவர்களை, நாங்கள் தொந்தரவு செய்யவில்லை.
கோவில் மனை வாடகை கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, 15 சதவீத உயர்த்தப்பட வேண்டும் என்பதை, ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் அளவிற்கு குறைத்து, புதிய அரசு உத்தரவை முதல்வர் பிறப்பிக்கவுள்ளார்.
சட்ட திருத்தம் கொண்டு வந்தால் தான், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
தி.மு.க., - பிரபாகரராஜா: சென்னை, வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடம், சாலிகிராமத்தில் உள்ளது. அங்கு மாணவியர் விடுதி கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த விடுதியை நவீனமயமாக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: சாலிகிராமம் விடுதி வகையில், வடபழனி கோவிலுக்கு, 14 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது. தொடர்புடைய அமைச்சரோடு பேசி வாடகை செலுத்தும்பட்சத்தில், அந்த இடத்தை பயன்படுத்துவதற்கான உத்தரவு, சட்டவிதிகளின்படி பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

