அரசின் நிதி நிலைமை சரியானால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்: அமைச்சர் சிவசங்கர்
அரசின் நிதி நிலைமை சரியானால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்: அமைச்சர் சிவசங்கர்
UPDATED : ஏப் 09, 2025 04:00 AM
ADDED : ஏப் 09, 2025 01:47 AM

சென்னை: ''எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும்பட்சத்தில், ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்கும் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
காங்கிரஸ் - கருமாணிக்கம்: திருவாடனை தொகுதி தொண்டியில், போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என, நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். இங்கு பணிமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைந்து பணிகளை செய்து தர வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: போக்குவரத்து கழகத்தின் நிதி நிலைமை அனைவரும் அறிந்தது தான். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி நிதியிலும் பணிமனை அமைக்கலாம். அதற்கு நிதி தர முன்வர வேண்டும்.
கருமாணிக்கம்: தொகுதி மேம்பாட்டு நிதி தருவதற்கு தயாராக உள்ளேன். அதே நேரத்தில், போக்குவரத்து துறையும் நிதி ஒதுக்க வேண்டும். தொகுதி முழுதும் பழைய பஸ்கள் ஓடுகின்றன. அவற்றை மாற்ற வேண்டும். பெண்களுக்கு விடியல் பயணம் தருவது போல, ஆண்களும் அரசு பஸ்களில் இலவசமாக செல்ல, விடியல் பயணம் வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: அரசு நிதி நிலைமை, போக்குவரத்து கழகத்தின் நிதி நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். நிதி அமைச்சரின் அறிவுரை பெற்று, அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆண்களுக்கும் இலவச பயணம் என்ற உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும்பட்சத்தில், இந்த கோரிக்கையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
பழைய பஸ்கள் மாற்றப்பட்டு, இதுவரை 3,400 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.