ADDED : ஜூன் 03, 2025 10:20 PM
“தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயராது,” என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரியலுார் மாவட்ட தி.மு.க., அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவர் அளித்த பேட்டி:
சில நாட்களாக குறிப்பிட்ட ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பஸ் கட்டணம் உயர்வு என்ற செய்தி வருகிறது. குறிப்பாக, மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற காரணத்தால் இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று, எதிர்க்கட்சிகள் தகவலை பரப்புகின்றனர்.
தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்வு இருக்காது. தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்த அதன் உரிமையாளர்கள், நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் மக்களிடம் கருத்தை கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைபாடு அல்ல; நீதிமன்ற அறிவுரைப்படி நடத்தப்படுகிறது. அரசை பொறுத்தவரை பொதுமக்கள் மீது இந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.
கடந்த காலங்களில் டீசல் விலை உயர்ந்த போது கூட, பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இன்று சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தாலும், மத்திய அரசு அதன் விலையை குறைக்க முன்வரவில்லை. இருந்தாலும், தமிழகத்தில் அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசிடம் கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-- நமது நிருபர் -

