தசைநார் வலுவிழப்பு நோய்க்கு ரூ.18 கோடிக்கு எந்த ஊசியும் இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
தசைநார் வலுவிழப்பு நோய்க்கு ரூ.18 கோடிக்கு எந்த ஊசியும் இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
ADDED : ஜன 09, 2025 10:44 PM
சென்னை:''முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய்க்கு, 18 கோடி ரூபாயில் ஊசி எதுவும் இல்லை,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - காமராஜ்: நன்னிலத்தில் வசிக்கும் மல்லிகாஸ்ரீ என்ற குழந்தைக்கு, முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நோயிலிருந்து குழந்தையை காப்பாற்ற செலுத்த வேண்டிய ஊசியின் மதிப்பு, 16 கோடி ரூபாய் என, டாக்டர்கள் சொல்வதாக பெற்றோர் கூறுகின்றனர். இக்குழந்தையை காப்பாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சுப்பிரமணியன்: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற புதிதில், நாமக்கல், தஞ்சை மாவட்டங்களில் தலா ஒரு குழந்தை இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஊசி அமெரிக்காவில் இருக்கிறது; 18 கோடி ரூபாய் என்றும் வசூல் நடந்தது.
அதுபோன்ற 18 கோடி ரூபாய் ஊசி, உலகில் எந்த நாட்டிலும் இல்லை. இந்நோய்க்கான மருந்து வெளிநாட்டிலும் இல்லை.
நன்னிலத்தைச் சேர்ந்த குழந்தையை இங்கே வரவழைத்தால், டாக்டர்களிடம் ஆலோசித்து சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - தங்கமணி: நாமக்கல் மாவட்டத்தில், முதுகெலும்பு தசைநார் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பெங்களூரு மருத்துவமனையில், 16 கோடி ரூபாய் ஊசி போடப்பட்டு நலமாக இருப்பதாக, பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
அதுபோல நன்னிலம் குழந்தைக்கும் ஊசி போட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சுப்பிரமணியன்: குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அரசு உதவும். மீண்டும் சொல்கிறேன். 18 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி, உலகில் எங்கும் இல்லை. இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்திடமும் பேசி விட்டோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

