தேவையின்றி வண்டியில் ஏறுகிறார் செல்லுார் ராஜு குறித்து அமைச்சர் கிண்டல்
தேவையின்றி வண்டியில் ஏறுகிறார் செல்லுார் ராஜு குறித்து அமைச்சர் கிண்டல்
ADDED : ஜன 10, 2025 11:39 PM

சென்னை:''மத்திய அரசு உத்தரவுப்படி, 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
வி.சி.க., - ஷாநவாஸ்: தமிழகம் முழுதும் ஆங்காங்கே பேருந்துகள் உடைந்த நிலையில் உள்ளன; கண்ணாடி இல்லாமல் ஓடுகின்றன; படிக்கட்டுகள் தொங்குகின்றன என, எதிர்மறையாக செய்திகள் வருகின்றன.
பழுதாகி பணிமனை செல்லும் பேருந்துகளின் படங்கள் வெளியிடப்படுகின்றன. போக்குவரத்து துறை ஏன் குறிவைக்கப்படுகிறது? இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்.
சிவசங்கர்: முந்தைய ஆட்சியில் கயிறு கட்டி இயக்கப்பட்ட பேருந்துகளின் போட்டோக்களை, இப்போது சில, ஐ.டி., விங் தரப்பில் பரப்புகின்றனர்.
புதிதாக 3,004 பேருந்துகள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. டெண்டர் விடப்பட்டு 2,232 பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணி நடக்கிறது. மேலும் 1,614 பேருந்துகள் வாங்க, டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, மார்ச் மாதம் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படுகின்றன.
மேலும், 500 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, 15 ஆண்டுகள் ஓடிய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்படுகின்றன.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அப்போது அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்லுார் ராஜு குறுக்கிட்டு பேச முயன்றார். அதற்கு அமைச்சர் சிவசங்கர், 'தேவை இல்லாமல் செல்லுார் ராஜு வண்டியில் ஏற நினைக்கிறார். வண்டி நேராக, 'தெர்மாகோல்' நோக்கி செல்லும்' என்றார். உடனே, அவர் அமர்ந்து விட்டார்.

