அரசு பணியை தாமதப்படுத்தினால் அடுத்த 'டெண்டர்' கிடையாது அமைச்சர் வேலு கண்டிப்பு
அரசு பணியை தாமதப்படுத்தினால் அடுத்த 'டெண்டர்' கிடையாது அமைச்சர் வேலு கண்டிப்பு
ADDED : ஆக 08, 2025 11:22 PM
சென்னை:''கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி, அரசு பணிகளை தாமதப்படுத்தக் கூடாது. அவ்வாறு பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு, அடுத்த பணியை வழங்கக்கூடாது,'' என, பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு, அமைச்சர் வேலு உத்தர விட்டார்.
மாநிலம் முழுதும் நடந்து வரும் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது:
சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி பெற்று, உடனடியாக பணிகளை துவக்க வேண்டும். நடந்து வரும் பணிகளை விரைவில் முடிக்க, கண்காணிப்பு பொறியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், சுற்றுலா மாளிகைகள் உள்ளிட்ட இடங்களில், பழைய, 'லிப்ட்'களை சீரமைக்க வேண்டும். 'லிப்ட்' இல்லாத இடங்களில், புதிதாக அமைக்க வேண்டும்.
பருவ மழை காலத்தை முன்னிட்டு வெள்ள தடுப்பு, பழைய கட்டடங்களை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை, 'பம்ப் செட்' வாயிலாக அகற்றுதல் போன்ற பணிகளை செய்வதற்கு உரிய ஏற்பாடு களை செய்ய வேண்டும்.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி பணிகளை தாமதப்படுத்தக் கூடாது. அவ்வாறு பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு, அடுத்த பணியை வழங்கக்கூடாது.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.