அமைச்சர்கள் மறைமுக நெருக்கடி? விக்கிரவாண்டிக்கு மாறிய விஜய்
அமைச்சர்கள் மறைமுக நெருக்கடி? விக்கிரவாண்டிக்கு மாறிய விஜய்
ADDED : ஆக 16, 2024 08:04 PM
சென்னை:அமைச்சர்களின் மறைமுக நெருக்கடியால், நடிகர் விஜய் தன் கட்சி மாநாட்டை விக்கிரவாண்டிக்கு மாற்றியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்குவதாக, பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அறிவித்தார். மாநாடு நடத்தி கட்சியின் கொடி, கொள்கைகள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், கட்சியை தயார்படுத்தும் பணியை செய்து வருகிறார்.
த.வெ.க., முதல் அரசியல் மாநாடு, மதுரை அல்லது திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு தனியார் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்கள், மாநாடு நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டன. அமைச்சர்களின் மறைமுக நெருக்கடிகள் காரணமாக இடங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் இடத்தை தேர்வு செய்துள்ளனர். அங்கு கட்சி மாநாட்டை, செப்., 22ல் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை விஜய் தரப்பினர் துவங்கியுள்ளனர்.
இந்த இடத்தையும் தரக்கூடாது என, அமைச்சர் ஒருவர் தரப்பில் நெருக்கடி தரப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், இப்பிரச்னையில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.