தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புலம்பல்
தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புலம்பல்
ADDED : மார் 14, 2026 06:53 AM
மதுரை: தேர்தல் நெருங்கும் நிலையில் மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து விடுவார்களோ என பயந்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டங்களை செயல்படுத்த அமைச்சர்கள் மறைமுகமாக முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. குறிப்பிட்ட பணிகளுக்கு எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கிய பின், அரசு அதற்கு தடையில்லா சான்று வழங்கும். அதை வைத்தே சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பணிகள் துவங்கப்படும்.
தேர்தல் நெருங்குவதால் சில மாதங்களாக தங்கள் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வமாக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி வருகிறார்கள். அதேசமயம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கிய போதிலும் அதற்கு தடையில்லா சான்று வழங்கக்கூடாது என அமைச்சர்கள் மறைமுகமாக அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்லுார் ராஜூ கூறியதாவது: என் தொகுதிக்குட்பட்ட பரவைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கினேன். ஆனால் கடந்த வாரம்தான் தடையில்லா சான்றே கிடைத்தது. பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒப்புதல் பெற்று பணிகளை துவக்கினேன். இதுகுறித்து மக்களிடமும் தெரிவித்தேன். உள்ளூர் அமைச்சரின் தலையீட்டால்தான் தடையில்லா சான்று தராமல் காலம் தாழ்த்தினர். என் தொகுதியில் மட்டுமல்ல, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளிலும் இதே நிலைதான். தேர்தலில் எங்களுக்கு ஓட்டளித்து விடுவார்கள் என்ற பயமே இதற்கு காரணம். இவ்வாறு கூறினார்.
