தொழில் துறையில் பின்தங்கிய தமிழகம்; அமைச்சர் பேச்சே சான்று: பழனிசாமி
தொழில் துறையில் பின்தங்கிய தமிழகம்; அமைச்சர் பேச்சே சான்று: பழனிசாமி
ADDED : ஜூன் 23, 2025 04:00 AM

சென்னை:  “தி.மு.க., ஆட்சியில், தொழில் முதலீடுகள் குறைகின்றன” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு, கடலோர மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில், 1.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து, மத்திய அரசு, சிங்கப்பூர் துணை பிரதமருடன் பேச்சு நடத்தியது. அப்போது ஆந்திரா, குஜராத், மஹாராஷ்டிரா மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அவர்களின் கடலோர மாவட்டங்களில் துறைமுகங்களை மேம்படுத்த, தொழில் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டியுள்ளன. தி.மு.க., அரசு, தமிழக கடலோர மாவட்டங்களின் துறைமுகங்களை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
தி.மு.க., அரசு, வெற்று விளம்பரங்கள் வாயிலாக, உண்மைகளை மறைக்கும் அரசு என்பதை, தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியது தான் முதல்வர் ஸ்டாலின் சாதனை. இந்த சாதனையை, பல கோடி ரூபாய் அரசு செலவில், விளம்பரப்படுத்துவது வேதனை.
இரு நாட்களுக்கு முன், தி.மு.க., அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் தியாகராஜன், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில் துறை பின்தங்கியுள்ளது' என, கருத்து தெரிவித்துள்ளார். இதுவே தி.மு.க., ஆட்சியில் தொழில் துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

