மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள் அமைச்சு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
மாநகராட்சிகளில் புதிய பணியிடங்கள் அமைச்சு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2025 11:55 PM
சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்க தலைவர் ஆர்.சுப்பிரமணியன் கூறியதாவது:
மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங்கள் இல்லை. துாத்துக்குடி, திருப்பூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தாம்பரம், கடலுார், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், கும்பகோணம் மாநகராட்சிகளில், மக்கள் தொகைக்கு ஏற்றவாறு புதிய பணியிடங்கள் உருவாக்குவது அவசியம்.
போதிய பணியிடங்கள் இல்லாததால், நகரமைப்பு பணிகள், திடக்கழிவு, பொது சுகாதார பணிகள், பொதுமக்கள் சேவை, வருவாய் பெருக்குதல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன .
நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 40 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆனால், மாநகராட்சிகளில் 4,145 பணியிடங்கள் என, குறைந்த அளவு பணியிடங்களை மாநகராட்சி நிர்வாகம் கேட்டது.
அதை ஏற்காமல், 3,417 பணியிடங்களை மட்டுமே அரசு அனுமதித்தது. அதேபோல், 138 நகராட்சிகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்காமல், பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 6,012 பணியிடங்கள் கோரப்பட்டு, 5,203 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பணியிடங்கள் வழங்க வேண்டும். அதேபோல், துாய்மை பணி போன்றவற்றுக்கு, வெளி முகமை அடிப்படையில் ஆட்கள் நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.