காணாமல் போனவர்கள் குறித்த புகார் அலட்சியம் கூடாது: டி.ஜி.பி., கண்டிப்பு
காணாமல் போனவர்கள் குறித்த புகார் அலட்சியம் கூடாது: டி.ஜி.பி., கண்டிப்பு
ADDED : நவ 05, 2024 12:17 AM

சென்னை : 'காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை அலட்சியம் செய்யக்கூடாது' என, போலீசாருக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரத்தை காவல் துறை தெரிவித்தாலும், அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
காணாமல் போனவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், காவல் நிலையங்களில் தரப்படும் புகார்கள் மீது, போலீசார் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், டி.ஜி.பி., பிறப்பித்துள்ள உத்தரவு:
காணாமல் போனவர்கள் குறித்து புகார் கிடைத்த உடன், விசாரணையில் ஈடுபட வேண்டும்.
அவர்களின் புகைப்படங்கள், உறவினர்கள் மற்றும் விசாரணை அதிகாரியின் தொடர்பு எண்களுடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல் நிலையங்களின் பலகையில் தெரியும்படி ஒட்ட வேண்டும்.
புகார் அளித்த நபர்களின் ஒத்துழைப்புடன், காணாமல் போன நபர்கள் அடிக்கடி சென்று வரும் இடங்கள், பஸ், ரயில், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தேடுதலில் ஈடுபட வேண்டும்.
புகார் மீது, உடனடியாக சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கி, 24 மணி நேரத்தில் விசாரித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் புகார்கள் மீது அலட்சியம் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.