நிர்வாகிகளை குஷிப்படுத்த 110 பேருக்கு பைக்; தெற்கு மாவட்டத்தில் எம்.எல்.ஏ., தாராளம்
நிர்வாகிகளை குஷிப்படுத்த 110 பேருக்கு பைக்; தெற்கு மாவட்டத்தில் எம்.எல்.ஏ., தாராளம்
ADDED : ஜூலை 22, 2025 07:49 AM

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை துவக்கி விட்டது. உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், கட்சித் தலைவர்களின் சுற்றுப்பயணம் என தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி விட்டது.
குறிப்பாக ரிஷிவந்தியம் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மன கசப்புகளை மறந்து தேர்தல் களத்தில் களமாடுவதற்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போது நடக்கும் குடும்ப விழா துவங்கி, ஓம் சக்தி மன்றம், மகளிர் மன்றம் என எந்த அமைப்புகளால் இருந்தாலும், விழா செலவுத் தொகையை வாரி வழங்கி வருகிறார் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கட்சியில் அனைத்து அணி நிர்வாகிகளையும் தேர்தல் களத்திற்கு தயார்படுத்தும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகளின் பட்டியலை தயார் செய்து, அவர்களுக்கு 110 ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளார்.
சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுவின் கட்சி அலுவலகத்தில், 110 பைக்குகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு, இளைஞர் அணி நிர்வாகிகள் அணிவகுக்க, இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி நிர்வாகிகளுக்கு அதன் சாவியை ஒப்படைத்தார்.
தமிழகத்திலேயே உறுப்பினர் சேர்க்கையில் ரிஷிவந்தியம் தொகுதி முன்னணி வகிப்பதாக வசந்தம் கார்த்திகேயனை, உதயநிதி பாராட்டி பேசியதும் அவருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இதனால் 110 பைக்குகளும் புடை சூழ, மணலுார்பேட்டை வழியாக தியாகதுருகம் வரை இளைஞர் அணி நிர்வாகிகளுடன் வசந்தம் கார்த்திகேயன் பைக்கில் பயணம் செய்தார்.
பைக் பெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.
இவர்களையும் குஷிப்படுத்த திட்டம் தயாராகி வருவதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள். கட்சியினரை மகிழ்வித்தாலும், மற்றொறுபுறம் பயன்பெறாத தொண்டர்கள் கடுப்பில் உள்ளனர்.
இது தி.மு.க., விற்கே பாதகமாகிவிடுமோ என்ற அச்சத்தை உதிர்க்கின்றனர் விசுவாசமான அடிமட்ட கட்சி தொண்டர்கள்.