அ.தி.மு.க.,வை விமர்சிக்க தி.மு.க., தலைவருக்கு அருகதை இல்லை: எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆவேசம்
அ.தி.மு.க.,வை விமர்சிக்க தி.மு.க., தலைவருக்கு அருகதை இல்லை: எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆவேசம்
ADDED : ஏப் 15, 2025 04:31 AM

பொள்ளாச்சி: ''லஞ்சம், ஊழல் சாக்கடையில் தி.மு.க., அரசு மூழ்கியுள்ளது. அந்த கட்சியின் தலைவருக்கு அ.தி.மு.க., குறித்து விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேர்நிலையம் அருகே, அம்பேத்கரின்,135வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது போல, அ.தி.மு.க., எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். எல்லோரிடமும் அப்போதைக்கு கூட்டணி சேருகிறார்; சிலரை உயர்த்தியும், சிலரை தாழ்த்துகிறார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்ததும், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களது ஆட்சி விரைவில் இன்னும், 10 அமாவாசைகளில் வீட்டுக்குச்செல்லும்.
அவர்கள் செய்த லஞ்ச, ஊழல்களுக்கு எந்த சிறைக்குச்செல்வர் என சொல்ல முடியாது.
அந்தளவு லஞ்ச, ஊழல் சாக்கடையில் தி.மு.க., மூழ்கிவிட்டது. அந்த கட்சித்தலைவருக்கு, அ.தி.மு.க., வை விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை.
விஜய் தற்போது கட்சி துவங்கியுள்ளார்; அவரது கட்சியை பலமாக்கி வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபடலாம்.
50 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த, மூன்று முதல்வர்களை தந்த அ.தி.மு.க., கட்சியை பற்றி விமர்சிக்கும் போது, நிதானத்தை அவர் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.