கொறடா உத்தரவை மீறினால் எம்எல்ஏ பதவி பறிபோகும்; இபிஎஸ் ஆதரவு எம்பி இன்பதுரை எச்சரிக்கை
கொறடா உத்தரவை மீறினால் எம்எல்ஏ பதவி பறிபோகும்; இபிஎஸ் ஆதரவு எம்பி இன்பதுரை எச்சரிக்கை
ADDED : மே 12, 2026 10:11 PM

சென்னை: கொறடா உத்தரவை மீறினால் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்று இபிஎஸ் ஆதரவு எம்பியான இன்பதுரை எச்சரித்து உள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை கட்சித் தலைவருமான இபிஎஸ்சால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டசபை கொறடாவை நியமிக்க முடியும்; சட்டசபை உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.
மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டசபை கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, அதிமுக அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் இபிஎஸ் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை.
இவ்வாறு இன்பதுரை கூறி உள்ளார்.
