நடமாடும் மருத்துவமனை; சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு
நடமாடும் மருத்துவமனை; சத்யசாய் சேவா நிறுவனங்கள் அர்ப்பணிப்பு
ADDED : பிப் 21, 2024 06:36 AM
கோவை : ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீ சத்யசாய் நடமாடும் மருத்துவமனை சேவை, நேற்று கோவை மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், நடமாடும் மருத்துவ சேவை புட்டபர்த்தியில், 2006ம் ஆண்டு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் துவங்கப்பட்டது. 2014ல் சென்னையில் துவங்கப்பட்டது.
பின், கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்திலுள்ள, வித்ய பாரதி மஹாலில், நேற்று காலை 11:00 மணிக்கு இந்த சேவை துவங்கியது.
சேவை
ஸ்ரீ சத்ய சாய் சேவா சென்ட்ரல் டிரஸ்ட் பிரசாந்தி நிலைய நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் கொடியசைத்து, நடமாடும் மருத்துவ சேவையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரத்னாகர் பேசியதாவது:
நாம் சஞ்சலமடைந்திருக்கும் போதும், அமைதி தேவைப்படும் போதும், பிரச்னைகளுக்கான தீர்விற்காகவும் பகவானிடம் செல்கிறோம். மரணம், ஜனனம் எது வந்தாலும் அவரையே அணுகுகிறோம்.
ஏழை மக்களுக்கு
'ஏழைகளுக்காக வாழ்வேன், சேவை செய்வேன், ஏழை மக்களுக்காக உயிரையும் விட சித்தமாக இருக்கிறேன்' என்று சொன்னார் பகவான் சத்யசாய் பாபா. இந்த நிறுவனத்தின் அடித்தளமே அது தான். அந்த துாய நோக்கம் மற்றும் உணர்வு தான், உலகம் முழுக்க பரந்து விரிந்து உள்ளது.
அமெரிக்காவிலுள்ள பிரசாந்தி டிரஸ்ட், இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை வழங்கி உதவியிருக்கிறது. எங்கெல்லாம் நல்ல பணி நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் கவர்ந்திழுக்கப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.

