ஆவின் ஐஸ்கிரீம் 'ஆர்டர்' செய்ய மொபைல் எண் அறிவிப்பு
ஆவின் ஐஸ்கிரீம் 'ஆர்டர்' செய்ய மொபைல் எண் அறிவிப்பு
ADDED : ஜன 05, 2025 12:27 AM
சென்னை:'ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை, இல்ல சுப நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவைக்கு, இனி மொபைல் போனில் ஆர்டர் செய்யலாம்' என, ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
மக்களுக்கு ஐஸ்கிரீம் வகைகள் எளிதில் கிடைக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 75 வகைகளுக்கு மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுதும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆவின் ஐஸ்கிரீம் வகைகள், பாலை மட்டுமே கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால், பிற நிறுவன ஐஸ்கிரீம் வகைகளை காட்டிலும், ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இவை, நுகர்வோருக்கு எளிதில் சென்றடையும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஆவின் தயாரிப்புகளை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கொள்முதல் செய்வதன் வாயிலாக, 80 சதவீத வருவாய் பால் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சென்றடைகிறது.
ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை, தங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் இல்ல சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்த, அருகிலுள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன் பெறலாம்.
மேலும், 99443 53459 என்ற மொபைல் போன் எண் வாயிலாகவும் 'ஆர்டர்' செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

