சொத்து வரி செலுத்த எளிய வழி மொபைல் போன் எண் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த எளிய வழி மொபைல் போன் எண் அறிவிப்பு
ADDED : ஜூலை 18, 2025 08:30 PM
சென்னை:ஊரக பகுதிகளில் ஆறரை மாதங்களில், 103.92 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண, மொபைல் போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புவாசிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர், வரி செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, 2023 முதல், இணையவழி வரி வசூலிக்கும் திட்டம் துவக்கப்பட்டது. அதன்படி, https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் எளிதாக வரி செலுத்தலாம்.
மேலும், வீடுகளுக்கே சென்று சொத்து வரி வசூலிக்கும் வகையில், ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும், பி.ஓ.எஸ்., என்ற விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, 2025 - 2026ம் நிதியாண்டில் இதுவரை, 19.33 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 103.92 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஊரக உள்ளாட்சி மற்றும் வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
ஊரக பகுதிகளில் சொத்து வரி செலுத்தப்பட்ட பின், இணையதளத்திலேயே அதற்கான ரசிதை பெற்றுக் கொள்ளலாம். சொத்து வரி செலுத்துவதில் இடர்பாடுகள் இருந்தால், பொது மக்களுக்கு வழிகாட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 98849 24299 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் வாயிலாக, சொத்து வரி எவ்வாறு செலுத்த வேண்டும்; எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்வதன் வாயிலாகவும் தீர்வு காணப்படும். இதன் வாயிலாக, சொத்து வரி தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

