திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த மொபைல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர்
திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த மொபைல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர்
ADDED : ஜன 05, 2025 02:00 PM

சென்னை: 'திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, தன்னுடைய 'ஐபோன் 13 புரோ' ரக மொபைல் போனை, தவறுதலாக காணிக்கை உண்டியலில் போட்டுள்ளார். அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.
அதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'கோவில் உண்டியலில் செலுத்தப்படும் அனைத்தும் சுவாமிக்கு சொந்தம்' என, மொபைல் போன் வழங்க மறுத்துவிட்டனர். சமீபத்தில், அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது, தினேஷ் மொபைல் போனும் எடுக்கப்பட்டது. கோவில் நிர்வாகம், சிம் கார்டை மட்டும் அவரிடம் வழங்கி, மொபைல் போனை பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டியது.
மொபைல் போன் பக்தரிடம் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தபடியே இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜன.,05) நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: இந்த ஆட்சி கொடுக்கின்ற ஆட்சி, எடுக்கின்ற ஆட்சி அல்ல; திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான தீர்வு எட்டப்பட்டுவிட்டது; இன்று அதற்குண்டான பரிகாரம் நடைபெறும். இன்று அந்த நபரிடம் செல்போனை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

