UPDATED : ஜூலை 11, 2025 08:26 AM
ADDED : ஜூலை 10, 2025 10:31 PM
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு, இப்பகுதிகளில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக்கூடும். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, ஒருசில இடங்களில் அசவுகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலைய பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.