ADDED : மார் 16, 2026 02:35 AM

சென்னை: 'தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலிருந்து, குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. தென்மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும் நாளையும், லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல், 19ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்ட மாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

