ADDED : டிச 06, 2025 01:51 AM

சென்னை:தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
அடுத்தபடியாக, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், வி.ஐ.டி., சென்னை வளாகம் ஆகிய இடங்களில் தலா, 7; சோழிங்கநல்லுார் சத்யபாமா பல்கலை, புழல் ஆகிய இடங்களில் தலா, 6; உத்தண்டி, சோழவரம் ஆகிய இடங்களில் தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில், வரும் 11 வரை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

