எந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்பது? தி.மு.க., அரசு விரைவில் முடிவு
எந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்பது? தி.மு.க., அரசு விரைவில் முடிவு
ADDED : டிச 06, 2025 01:52 AM
சென்னை:போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வூதிய திட்டங்களை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என, அரசு ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தி.மு.க., ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., அரசு, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையே, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை, புதிதாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் இதை செயல்படுத்த இருப்பதாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்; இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், மூன்று ஓய்வூதிய திட்டங்களில், சிறந்த திட்டத்தை தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்டு அரசுக்கு பரிந்துரைக்க, கடந்த பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான இக்குழுவில், நிதித்துறை அதிகாரிகள் இருவர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர், செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால், இடைக்கால அறிக்கையை மட்டுமே இந்த குழு சமர்ப்பித்தது. இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன; இது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு முன், அரசு ஊழியர்களை சமரசம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, ஓய்வூதிய திட்டங்களை ஆராயும் குழு, தன் இறுதி பரிந்துரை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

