பதவி நாற்காலியை காப்பாற்ற ஆதரவு கேட்கிறார் மோடி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதவி நாற்காலியை காப்பாற்ற ஆதரவு கேட்கிறார் மோடி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : மார் 05, 2024 06:20 AM

சென்னை : மயிலாடுதுறையில் நேற்று நடந்த அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாங்கள் தேர்தலுக்காக, தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து, முகத்தை காட்டுபவர்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று, நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப் போகின்றனர். நம் பிரதமர், தமிழகத்திற்கு அடிக்கடி வரத்துவங்கி இருக்கிறார்; வரட்டும். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை.
தமிழகத்துக்கு நன்மை செய்து விட்டு, நாம் வைக்கிற மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு வரட்டும்.
அப்படி இல்லாமல், தமிழக மக்களின் வரிப்பணமும், ஓட்டும் மட்டும் போதும் என்று வருகிறார். நாம் சமீபத்தில் இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம்.
அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, 37,000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம்.
அதை கொடுத்து விட்டு, தமிழகத்துக்கு பிரதமர் வந்தாரா; ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கவில்லை.
ஆனால், தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள மட்டும், ஆதரவு கேட்டு வருகின்றனராம். தமிழக மக்கள் ஒரு போதும் இவர்களை பார்த்து, நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.
தமிழக உரிமைகளுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும், நம் அரசின் பக்கம் தான், தமிழக மக்கள் என்றைக்கும் நிற்பர். இவ்வாறு பேசினார்.

