சீன மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபரின் பணம் மீட்பு
சீன மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபரின் பணம் மீட்பு
ADDED : ஜூன் 19, 2025 11:00 PM
சென்னை:'ஆன்லைன்' மோசடி கும்பலிடம் சிக்கிய மேற்கு வங்க நபரின் 4 லட்சம் ரூபாய், சீன நாட்டு கும்பலுக்கு கிடைக்காமல், தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தடுத்துஉள்ளனர்.
'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்து வரும் சைபர் குற்றவாளிகள், பண முதலீடுகள் தொடர்பாக, மொபைல் போன் எண்களுக்கும், வாட்ஸாப் எண்களுக்கும், 'லிங்க்' அனுப்புகின்றனர்.
அதை தொட்டால், வாட்ஸாப் குழு ஒன்றுடன் இணைக்கப்படுகிறது.
அந்த குழுவில் ஏற்கனவே, பண முதலீடுகள் செய்து அதிக லாபம் சம்பாதித்ததாக, பலர் பதிவிட்டது போன்ற பதிவுகள் இருக்கும்.
இதை உண்மை என நம்பி பதில் அளிப்போரிடம், மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறி, 'கிரிப்டோகரன்சி' மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்களில் பெரும் தொகையை முதலீடாக பெற்று மோசடி செய்கின்றனர்.
இது தொடர்பான புகார்கள் அடிப்படையில், தமிழக சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சீன நாட்டு மோசடி கும்பல் போலி வங்கி கணக்குகளை துவக்கி, கைவரிசை காட்டி வருவதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, பல வங்கிகளின் மோசடி இடர் மேலாண்மை குழுக்களை தொடர்பு கொண்டு, அந்த கும்பலின் போலி வங்கி கணக்குகளை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
அப்போது, சீன நாட்டு மோசடி கும்பல், சிங்கப்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் டி.பி.எஸ்., வங்கியில், போலி சான்றிதழ்கள் வாயிலாக கணக்குகள் துவங்கி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
மேலும், அந்த மோசடி கும்பலிடம், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சிக்கி இருப்பதும், தான் ஏமாற்றப்படுவது தெரியாமல் மோசடி கும்பலுக்கு அவர் பணம் அனுப்பியதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, டி.பி.எஸ்., வங்கி உதவியுடன், மேற்கு வங்க மாநில நபர் செலுத்திய 4 லட்சம் ரூபாய், சீன நாட்டு மோசடி கும்பலின் கைகளுக்கு செல்லாதவாறு தடுத்து, அந்த பணத்தை மீட்டனர். இவ்விபரங்களை மேற்கு வங்க போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.
தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கையால், மேற்கு வங்க நபரின் பணம் மீட்கப்பட்டது.
இப்பணியில் ஈடுபட்ட மாநில சைபர் குற்றத்தடுப்பு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.