ADDED : பிப் 20, 2025 01:05 AM
சென்னை:'திருப்பூர் பகுதியில் வெளி மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பூரில் இளம்பெண் ஒருவர், அவரது கணவர், குழந்தை கண் எதிரில், மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில், 17 வயது சிறுமியை, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததால், ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளும் முன், திருப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை, தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டதையே காட்டுகிறது.
தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று, கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்.
இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
திருப்பூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், பீஹாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் பகுதியில், வெளி மாநிலத்தவர்களை, காவல் துறை கண்காணிக்க வேண்டும்.
தமிழக அரசு இனியும் வீண் பெருமை பேசாமல், பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

