'தேர்தல் நடக்கும் மாநிலத்திற்கு அதிக நிதி மற்ற மாநிலங்களை அவமதிப்பதே'
'தேர்தல் நடக்கும் மாநிலத்திற்கு அதிக நிதி மற்ற மாநிலங்களை அவமதிப்பதே'
ADDED : பிப் 01, 2025 11:17 PM
சென்னை:'தேர்தல் நடக்கும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்குவது, மற்ற மாநிலங்களை அவமதிக்கும் செயல்' என்று, த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வருமான வரி உச்சவரம்பு, 12 லட்சம் ரூபாயாக உயர்வு, பெண்கள், பட்டியலினர், பழங்குடியினர் தொழில் துவங்க, 2 கோடி ரூபாய் வரை கடன் போன்ற பட்ஜெட் அறிவிப்புகளை உளமாற வரவேற்கிறேன்.
அதே நேரத்தில், ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் வரி குறைப்பு. ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, விலைவாசியை கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, எந்த அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
புதிய ரயில் பாதைகள், சாலைகள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற, தமிழகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு, எந்த அறிவிப்பும் இல்லை.
உலகிலேயே தமிழகத்தில்தான் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு உரிய அங்கீகாரமும், அகழ்வாராய்ச்சிக்கு நிதியும் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
தேர்தல் நடக்கும் மாநிலத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்குவது, மற்ற மாநிலங்களையும் அம்மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது,
வழக்கம்போல இந்த ஆண்டும், தமிழகத்திற்கு புதிய திட்டங்களை அறிவிக்காமலும், போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.