வந்ததை விட தந்ததே அதிகம்:தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த உதவிகள் பட்டியல் போடுகிறார்- நிர்மலா சீதாராமன்
வந்ததை விட தந்ததே அதிகம்:தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த உதவிகள் பட்டியல் போடுகிறார்- நிர்மலா சீதாராமன்
ADDED : ஜன 04, 2024 11:12 PM

சென்னை:தமிழகத்தில் இருந்து பெற்றதை விட, அதிக நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார்.
மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும், 'வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை' என்ற பிரசார பயணம் நாடெங்கும் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ரங்கராஜபுரத்தில் நேற்று நடந்த சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
மத்திய அரசின் முத்ரா கடன் உதவி, தெருவோர வியாபாரிகளுக்கான கடன் உதவி உள்ளிட்ட, 17 திட்டங்களில் பயனடைந்தவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த திட்டங்களின் கீழ் விண்ணப்பித்திருந்த பயனாளிகள் சிலருக்கு, நிர்மலா சீதாராமன், கடனுக்கான காசோலைகள் வழங்கினார். '2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவோம்' என, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின், நிர்மலா பேசியதாவது:
சுதந்திர நுாற்றாண்டான 2047ல், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன், பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மோடி அரசின் திட்டங்களால், தமிழகம் பெரும் பயனடைந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும், 37 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு
11.40 லட்சம் வீடுகள்
62.40 லட்சம் கழிப்பறைகள்
93 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
1.50 கோடி வங்கிக் கணக்குகள்
1.80 கோடி பேருக்கு விபத்து காப்பீடு
3.10 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு
உத்தரவாதம் இல்லா கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக, தமிழகத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், நாடு முழுக்க ஓடும், 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் தான் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்திற்கு மட்டும் நான்கு 'வந்தே பாரத்' ரயில்கள்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் சென்னையில், 170 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை
50,000 கோடி ரூபாயில் சென்னை -- பெங்களூரு விரைவுச் சாலை
பாதுகாப்பு தொழில் வழித்தடம் என, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்திலிருந்து நேரடி வரி வருவாயாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், 6.24 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தமிழகத்திற்கு 6.97 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த 1996ல் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் இருந்த, 81,645 கோடி ரூபாயை, மோடி அரசு வழங்கியது. இதில் தமிழகத்திற்கு, 3,225 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டு களில், தமிழகத்திற்கு கிடைத்த 57,557 கோடி, 'செஸ்' வரி முழுதும் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், பள்ளிகள், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், வீடுகள் கட்டவும் செலவிடப்பட்டது.
தமிழகத்திலிருந்து கிடைத்த மத்திய ஜி.எஸ்.டி., 27,360 கோடி ரூபாயில், 41 சதவீதம் தமிழகத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி, குறிப்பிட்ட தேதியில் தாமதம் இன்றி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.