கூட்டம் அதிகம் உள்ள கோவில்களுக்கு கூடுதல் மொபைல் போன் 'கவுன்டர்கள்'
கூட்டம் அதிகம் உள்ள கோவில்களுக்கு கூடுதல் மொபைல் போன் 'கவுன்டர்கள்'
ADDED : செப் 03, 2026 12:38 AM
சென்னை: 'கூட்டம் அதிகம் உள்ள கோவில்களில், கூடுதலாக, மொபைல் போன் பாதுகாப்பு கவுன்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:-----
தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும், 52 முதுநிலை கோவில்களில், மொபைல் போன்களை கோவில் உள்ளே எடுத்துச் செல்வதற்கான தடை, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. மொபைல் போனை பாதுகாக்க, 5 ரூபாய் என்ற குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மொபைல் போன்களை பாதுகாக்கும் ஊழியர்கள், தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளுக்காகவே, இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை எதிர்காலத்தில், நடுத்தர மற்றும் சிறிய கோவில்களுக்கும், தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.
சில கோவில்களில், மொபைல் போன் பாதுகாப்பு கவுன்டர்களில், பக்தர்கள் அதிகளவில் வரிசையில் நிற்பதால், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அக்கோவில்களில் கூடுதல் மொபைல் போன் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெளியூரிலிருந்து வருவோர், தாங்கள் தங்கியிருக்கும் அறைகள், வாகனங்களில் மொபைல் போன்களை வைத்துவிட்டும் கோவிலுக்கு வரலாம். போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் வசதி இல்லாத, சாதாரண மொபைல்கள் கோவிலுக்குள் எடுத்து வர, எந்தவித தடையும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
