ஐகோர்ட்டில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் தேக்கம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
ஐகோர்ட்டில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் தேக்கம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
ADDED : அக் 26, 2024 11:58 PM

கோவை:நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறித்த, தென் பிராந்திய அளவிலான இரண்டு நாள் நீதித்துறை மாநாடு, 'நீதிமன்ற வழக்குகள்: குவிதலும், குறைத்தலும்' என்ற பெயரில், தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பயிலகம், கோவை மண்டல மையத்தில் நேற்று துவங்கியது.
துவக்க விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசியதாவது:
நீதிமன்றங்களில் வழக்குகள் காலதாமதம் ஆவது மட்டுமல்ல, நீதித்துறையை அணுகுவது பலருக்கு கடினமாக இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்னை.
நிதி தேவை
உரிய காலத்தில் தீர்ப்பு பெறுவது, பலரின் பெரும் கனவாக உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
வழக்குகள் தீர்க்கப்படும் விகிதம், 114 சதவீதமாக இருந்தபோதும், நிலுவை எண்ணிக்கை கவலை அளிக்கிறது. ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணிகள், நீதி பரிபாலனத்தைத் தாமதப்படுத்துகின்றன. நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த, அதிக நிதி தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய நீதித்துறை பயிலக இயக்குனர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அனிருத்தாபோஸ் பேசியதாவது:
வழக்குகளைத் தீர்ப்பதில், ஐ.சி.டி., தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது. நீதிமன்ற வழக்குகளில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, காலத்தின் தேவையாக உள்ளது.
வணிக வழக்குகளுக்கு மட்டுமின்றி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், விளிம்பு நிலை மக்கள் தொடர்பான வழக்குகளுக்கும், விரைவு நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றன.
பிரச்னைக்கு தீர்வு தரும்
விசாகா கமிட்டி போன்ற பரிபாலன முறைகள் கட்டுமானத் துறை, வீட்டு உதவியாளர்கள் போன்றவர்களுக்கு பலனளிக்கிறதா? நீதித்துறை அவர்களைத்தேடி செல்வது பற்றி யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் பேசுகையில், ''நீதிமன்ற வழக்குகள் தேங்கிக் குவிவது பெரும் பிரச்னை. நீதிபதிகள் தங்களின் ஓய்வு தினம் வரை, தினமும் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போது பரஸ்பர கற்றல் நிகழும். அது பிரச்னைகளுக்குத் தீர்வைத் தரும்,'' என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசுகையில், ''ஏ.டி.ஆர்., எனப்படும் 'பூசல்களுக்கு மாற்றுத் தீர்வு' முறையைப் பயன்படுத்தி, வழக்குகள் குவிவதைத் தடுத்தல், ஊடகங்களின் தாக்கத்தை எதிர்கொள்ளுதல்.
''வழக்கறிஞர் - நீதிபதிகளுக்கான இணக்கம், 'பிளாக் செயின்' உள்ளிட்ட தவிர்க்கவியலா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் குறித்த விவாதம் அவசியமான ஒன்று,'' என்றார்.
தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக இயக்குனர் சத்யா, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர்.