48 பல் டாக்டர் பணியிடத்திற்கு 8,000க்கும் மேற்பட்டோர் போட்டி
48 பல் டாக்டர் பணியிடத்திற்கு 8,000க்கும் மேற்பட்டோர் போட்டி
ADDED : மே 04, 2025 12:17 AM
சென்னை:“தமிழகத்தில், 48 பல் டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப, 8,000க்கும் மேற்பட்ட டாக்டர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை மருத்துவ கல்லுாரியில், தேசிய அளவிலான மருத்துவ கல்வி மாநாட்டை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் உட்பட, 11,876 மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, நாம் முன்னேறி உள்ளோம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 2.04 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்; இதற்காக, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, இதுவரை, 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், 48 பல் டாக்டர்கள் பணியிடங்களுக்கு, 11,720 பேர் தேர்வு எழுதினர்.
இதில், 8,000க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.மேலும், இத்துறையில் பணிபுரியும், 42,718 பேருக்கு வெளிப்படை தன்மையுடன், அவரவர் விரும்பும் இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.