தி.மு.க., - எம்.பி., மீதான வழக்கு முடிக்க மேலும் அவகாசம்
தி.மு.க., - எம்.பி., மீதான வழக்கு முடிக்க மேலும் அவகாசம்
ADDED : மார் 01, 2024 09:41 PM
சென்னை,:கடலுார் தி.மு.க., - எம்.பி.,க்கு எதிரான கொலை வழக்கு விசாரணையை முடிக்க, மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக இருப்பவர் ரமேஷ்; இவருக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில், பண்ருட்டி அருகில் உள்ள மேல்மாம்பட்டை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் பணியாற்றினார். கடந்த 2021 செப்டம்பரில், கோவிந்தராசு கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை, கடலுார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், விசாரணை முறையாக நடக்கவில்லை எனவும், கோவிந்தராசுவின் மகன் செந்தில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க, கடந்த ஆண்டு ஜூலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்வேல் சார்பில் வழக்கறிஞர் சசிகுமார் ஆஜராகி, ''வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். ஒரு சாட்சி கூட விசாரிக்கப்படவில்லை,'' என்றார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் அவகாசம் கோரினார். அதைத்தொடர்ந்து, மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.

