வீட்டு வேலை செய்யாவிட்டால் 'டிஸ்மிஸ்' கொசு ஒழிப்பு பணியாளர்கள் புகார்
வீட்டு வேலை செய்யாவிட்டால் 'டிஸ்மிஸ்' கொசு ஒழிப்பு பணியாளர்கள் புகார்
ADDED : ஏப் 11, 2025 12:39 AM
சென்னை:'சுகாதார ஆய்வாளர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் லஞ்சம் கொடுக்காவிட்டால், அவர்களின் வீட்டு வேலைகளை செய்யாவிட்டால், கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்' என, அகில இந்திய அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் கணேசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் மாதம் 1,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என, சுகாதார ஆய்வாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
பணம் கொடுக்க மறுக்கும் பணியாளர்களை, வேலையை விட்டு நீக்குகின்றனர்.
அவர்களுக்கு பதிலாக, ஊராட்சி ஒன்றிய செயலர்கள் வாயிலாக புதிய ஆட்களை நியமிக்கின்றனர். இதனால், 15 ஆண்டுகளாக, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஊராட்சி ஒன்றியங்களில், 40 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, 25 பேருக்கு பணி வழங்கப்படாமல் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் பேரூராட்சியில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, தினக்கூலியான 534 ரூபாய்க்கு பதிலாக, 450 ரூபாய் வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், கவுன்சிலர், மேயர், ஊராட்சி தலைவர் போன்றோர் வீடுகளில், வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
வீட்டு வேலை செய்ய மறுக்கும் பணியாளர்களை, பணியில் இருந்து நீக்கம் செய்கின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், கலெக்டர்கள் தலையீட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.