சாலை தடுப்பில் மோதி நொறுங்கிய கார் தாய், மகன் பலி; தந்தை, மகள் படுகாயம்
சாலை தடுப்பில் மோதி நொறுங்கிய கார் தாய், மகன் பலி; தந்தை, மகள் படுகாயம்
ADDED : மே 14, 2025 01:22 AM

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதிய விபத்தில் தாய், மகன் பலியாகினர்; தந்தை, மகள் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 45; நகை வடிவமைப்பாளர். இவரது மனைவி சத்யா, 40, மகன் ஸ்ரீராம், 17, மகள் அபிநயாஸ்ரீ, 15.
நால்வரும் சில தினங்களுக்கு முன், பட்டுக்கோட்டையில் இருந்து காரில், விழுப்புரத்தில் உள்ள சதீஸ்குமாரின் சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் மாலை, மீண்டும் காரில் பட்டுக்கோட்டை புறப்பட்டனர். காரை சதீஷ்குமார் ஓட்டினார்.
நள்ளிரவு, 1:00 மணிக்கு, கும்பகோணம் அருகே அசூர் புறவழிச்சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டில் இருந்த பாலத்தடுப்பில் வேகமாக மோதியது. இதில், கார் அப்பளமாக நொறுங்கியது.
விபத்தில், சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ்குமார், ஸ்ரீராம், அபிநயாஸ்ரீ படுகாயங்களுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், ஸ்ரீராம் வழியிலேயே இறந்தார்.
சதீஷ்குமார், அபிநயாஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சுவாமிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

