ஆண் குழந்தையை விற்பனை செய்து பெண் குழந்தையை கொன்ற தாய் கைது
ஆண் குழந்தையை விற்பனை செய்து பெண் குழந்தையை கொன்ற தாய் கைது
ADDED : ஜன 19, 2025 12:57 AM
புதுக்கோட்டை, ஜன. 19--
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன், 28. மண்டையூர் அருகில் பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திலோத்தம்மாள், 24. இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.
இவர்களுக்கு தர்ஷிகா என்ற 2 வயது பெண் குழந்தை, மாதவன் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தனர். திலோத்தம்மாளுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கணவன், மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், நான்கு மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு வந்த திலோத்தம்மாள், இரு குழந்தைகளுடன் அங்கு தங்கினார். அவரின் தாய், அவரை கண்டித்து, கணவர் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதால், அங்கிருந்து வெளியேறியவர் திருச்சியில் தங்கியுள்ளார்.
கடந்த, 3ம் தேதி, 10 மாத ஆண் குழந்தையை திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்பனை செய்ததோடு, 7ம் தேதி, 2 வயது பெண் குழந்தையை, கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
தகவலறிந்த அவரது கணவர் முனியன் போலீசாரிடம் அளித்த புகாரின்படி, திலோத்தம்மாளை மண்டையூர் போலீசார் கைது செய்தனர். திருச்சியைச் சேர்ந்த ரஹமத்துநிஷா, 44, என்பவரிடம் விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தையை மீட்டு, காரைக்குடி காப்பகத்தில் சேர்த்தனர்.

