ADDED : ஏப் 03, 2025 07:43 AM

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே கிணற்றில் விழுந்த மருமகளை, மாமியார் காப்பாற்றினார். மேலே வரமுடியாமல் தவித்த இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த பழம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி மல்லிகா, 45. இவரது மருமகள் அய்யப்பன் மனைவி சரசு, 22.
இரண்டு பேரும் நேற்று காலை 9:30, மணிக்கு விவசாய நிலத்திற்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டருகே உள்ள 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சரசு கால் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாத சரசு கிணற்றில் விழுந்தது தத்தளித்தார்.
இதை தொடர்ந்து, நீச்சல் தெரிந்த மாமியார் மல்லிகா உடனே கிணற்றில் குதித்து,மருமகளை காப்பாற்றி, அங்குள்ள மேடான பகுதியில் சேர்த்தார்.
ஆனால், மேலே ஏறி வர படிகள் இல்லாத நிலையில், சத்தமிட்டார்.
இதைக் கேட்டு, அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்சோதி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரண்டு பெண்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

