அரசு பாட்டில் குடிநீருக்கு மவுசு; வெயிலால் விற்பனை அமோகம்
அரசு பாட்டில் குடிநீருக்கு மவுசு; வெயிலால் விற்பனை அமோகம்
ADDED : மார் 13, 2024 10:16 PM

பாலக்காடு : கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், கேரள அரசு விற்பனை செய்யும் பாட்டில் குடிநீருக்கு மக்கள் இடையே மவுசு அதிகரித்துள்ளது.
கேரள நீர்ப்பாசனத் துறையின் கீழ் செயல்படும், பொதுத்துறை நிறுவனம் கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம். இந்த நிறுவனம் 'ஹில்லி அக்வா' என்ற பெயரில், 15 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பனை செய்கிறது.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், அரசின் இந்த பாட்டில் குடிநீருக்கு மக்கள் இடையே மவுசு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கேரளநீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரள மாநிலத்தில், தொடுபுழா மற்றும் அருவிக்கரையில் பாட்டில் குடிநீர் உற்பத்தி மையம் செயல்படுகிறது.
தற்போது பாட்டில் குடிநீருக்கு தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நிறுவனத்துக்கு மொத்த வருவாயில், 2.3 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு நாளில், 45,600 பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 78 ஆயிரம் பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்கின்றோம்.
பொதுவாக, ஒரு மாதத்தில், 11.4 லட்சம் பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வழங்கப்பட்டது. தற்போது, 19.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 2022- - 23 ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய், 5.22 கோடி ரூபாயாகும்.
இந்தாண்டு, பிப்ரவரி இறுதி வரை 7.52 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மார்ச் மாதம் முடிவதற்குள், 8.5 கோடி ரூபாயாகும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

