ADDED : பிப் 19, 2024 06:00 AM
சென்னை: தமிழ்நாடு எம்.ஆர்.பி.,செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எம்.ஆர்.பி., என்ற, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வு வாயிலாக, 2015ல், 8,500 செவிலியர்களும், 2019ல், 3,500 செவிலியர்களும் தேர்வாகினர். இவர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுவரை, 5,500 செவிலியர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்; மற்றவர்கள் நிரந்தரம்செய்யப்படவில்லை.
தேர்தல் வாக்குறுதிப்படி, எம்.ஆர்.பி., செவிலி யர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.
அரசு கண்டு கொள்ளாததால், வரும் 21ம் தேதி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

