எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு; அரசு நடத்திய பேச்சில் சுமுக முடிவு
எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு; அரசு நடத்திய பேச்சில் சுமுக முடிவு
ADDED : ஏப் 28, 2025 04:56 AM

சென்னை : தமிழகத்தில், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை சமீபத்தில், 1,000 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில், அமைச்சருடன் நடந்த பேச்சுக்கு பின், 1,000 ரூபாய் குறைத்து விற்க, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சம்மதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படையில், நிலங்களுக்கு வரி விதிக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏப்., 16ல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விசாரணை
அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சில், உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறி, ஏப்., 21ல் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.
அதேநேரம், 1 யூனிட் கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை, தலா 1,000 ரூபாய் உயர்த்தி விற்கப்படும் என்று, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இதற்கு கட்டுமான துறையினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த விலை உயர்வு குறித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதம்; அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவு; குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள புதிய விலை போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டது.
சம்மதம்
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், துறை அதிகாரிகள், குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், அரசு வெளியிட்ட அறிவிப்பு: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்றவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து, 1,000 ரூபாய் குறைத்து விற்க சம்மதித்துள்ளது.
சாதாரண கற்களுக்கான, சீனியரேஜ் தொகை டன்னுக்கு, 60 ரூபாய் என்பது, 33 ரூபாயாக குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கான அரசாணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.