முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி 4 வாரங்களில் அனுமதி வழங்க உத்தரவு
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி 4 வாரங்களில் அனுமதி வழங்க உத்தரவு
ADDED : ஆக 01, 2025 03:40 PM
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்புக்காக, மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு, சுற்றுச் சூழல் அனுமதியை நான்கு வாரத்தில் வழங்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் - கேரளா இடையிலான முல்லை பெரியாறு அணையின் பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள கேரளா அரசு முட்டுக்கட்டை போடுகிறது.
எனவே இது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது.
அப்போது, 'முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் உபகரணங்களை, தமிழக அரசு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சாலையை செப்பனிடுதல், மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட மராமத்து பணிகள் நடந்து இருக்கிறதா? இந்த வேலைகளில், ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'பருவ மழையை காரணம் காட்டி வல்லக்கடவு சாலையை செப்பனிட கேரள அரசு அவகாசம் கேட்கிறது' என்றார்.
கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தற்போது முல்லை பெரியாறு அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
எனவே, சாலைகளை செப்பனிடும் பணி மற்றும் மரங்களை அகற்றுவது சவாலாக உள்ளது. இதற்கு சற்று அவகாசம் தேவை.
இதுகுறித்து தமிழக அரசு மற்றும் முல்லை பெரியாறு கண்காணிப்பு குழுவிடம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்' என பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்காக, மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு தேவைப்படும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு நான்கு வாரத்தில் வழங்க வேண்டும். அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு முன், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை கேரள அரசிடம், தமிழக அரசு வழங்க வேண்டும். அதற்குப் பிறகே அணையை பலப்படுத்தும் பணியை தமிழக அரசு துவக்க வேண்டும்.
அணை பகுதிக்கு செல்லும் சாலைகளை செப்பனிடும் பணிகளை பருவ மழை முடிந்தவுடன் கேரள அரசு விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-

