மழையால் 130 அடியை எட்டியது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
மழையால் 130 அடியை எட்டியது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
ADDED : மே 31, 2025 02:37 AM
கூடலுார்: முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையால் நீர் மட்டம் கடந்த ஆறு நாட்களில் 15 அடி வரை உயர்ந்து 130 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் தென்மேற்கு பருவமழை மே 23 ல் துவங்கியது. தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 82.6 மி.மீ., தேக்கடியில் 43.2 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7740 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு 933 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4233 மில்லியன் கன அடியாகும்.
நேற்று காலை நீர்மட்டம் 127.85 அடியாக இருந்த நிலையில் மாலை 4:00 மணி நிலவரப்படி 129 அடியை எட்டியது. பின் தொடர்ந்து பெய்த மழையால் 130 அடியை எட்டியது(மொத்த உயரம் 152 அடி).
கடந்த ஆறு நாட்களில் நீர்மட்டம் 15 அடி வரை உயர்ந்தது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகப்பகுதிக்கு நீர் திறப்பு 933 கன அடியாக இருப்பதால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.