முல்லை பெரியாறு பிரச்னை: கேரளாவுக்கு தினகரன் கண்டனம்
முல்லை பெரியாறு பிரச்னை: கேரளாவுக்கு தினகரன் கண்டனம்
ADDED : அக் 22, 2025 04:44 AM

சென்னை: அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
கேரள அரசின் உதவியுடன், 'கேரள பாதுகாப்பு பிரிகேட்' என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு, புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என , கருத்து தெரிவித்துள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கும், முல்லைப் பெரியாறு அணையை, இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில், கேரள அரசு செயல்பட்டு வருவது கண்டனத்திற்கு உரியது.
முல்லைப் பெரியாறு அணை வலுவோடு இருப்பதாக, ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர் குழு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அணை பாதுகாப்பு குறித்து, தொடர்ந்து வழக்கு தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில், வதந்திகளை பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு, தமிழக விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன், வலுவான வாதங்களை முன் வைத்து, கேரள அரசின் முயற்சிக்கு, சட்ட ரீதியாக தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.