'ட்ரோன்' சர்வே, சொத்து வரிக்கு அபராதம் நிறுத்தம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிவிப்பு
'ட்ரோன்' சர்வே, சொத்து வரிக்கு அபராதம் நிறுத்தம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிவிப்பு
ADDED : பிப் 21, 2025 01:26 AM

''கட்டடங்களை மறு அளவீடு செய்யும், 'ட்ரோன் சர்வே' மற்றும் தாமதமாக செலுத்தப்படும் சொத்து வரிக்கு 1 சதவீதம் அபராதம் விதிப்பது நிறுத்தப்படும். இதுவரை, ட்ரோன் சர்வே வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கீடும் நிறுத்தி வைக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தமிழக மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகளில் நடந்து வரும் பணிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் உள்ள தேக்க நிலை தொடர்பான ஆய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
ட்ரோன் சர்வே முறையை முதல்வர் ஸ்டாலின் நிறுத்தச் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்துக்கு முன், சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்குகிறோம்; குறிப்பிட்ட காலத்துக்கு பின் செலுத்தினால் அபராதம் விதிக்கிறோம். இதையும் முதல்வர் நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.
இவை உடனடியாக அமலுக்கு வரும். ஏற்கனவே, ட்ரோன் சர்வே எடுக்கப்பட்டு, சொத்து வரியை உயர்த்தியிருந்தாலும் நிறுத்தி வைக்கப்படும். 6 சதவீத வரி உயர்வு மட்டும் அமலில் இருக்கும்.
மாநகராட்சியோடு, ஊராட்சிகளை இணைக்கக்கூடாது என நினைத்தால், கலெக்டரிடம் மனு கொடுத்தால், மறு ஆய்வு செய்வர்.
மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன; அருகாமையில் உள்ளவர்களுக்கு வசதி கிடைக்காமல் இருப்பதால் இணைக்க நினைக்கிறோம்.
ஆட்சேபனை தெரிவித்தால், என்ன செய்வதென முதல்வர் முடிவெடுப்பார். கோவை, மதுரை மாநகராட்சிகளில் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்க இருக்கிறோம்; அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -