நகராட்சி நிர்வாக துறை செயலர் ஐகோர்ட்டில் ஆஜராகி விளக்கம்
நகராட்சி நிர்வாக துறை செயலர் ஐகோர்ட்டில் ஆஜராகி விளக்கம்
ADDED : செப் 29, 2026 02:55 AM
சென்னை: சொத்து வரி வழக்குகளில், மாநகராட்சி வழக்கறிஞர்கள் ஆஜராகாதது குறித்து, நகராட்சி நிர்வாக துறை செயலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சொத்து வரி உயர்வு தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில், மாநகராட்சிகள் சார்பில் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது.
இருப்பினும் யாரும் ஆஜராகாததால், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா ஆகியோர், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்குகள், நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் உள்ளிட்டோர், நேற்று நேரில் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி, ''மாநகராட்சி தொடர்பான வழக்குகளில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் முறையாக ஆஜராக வேண்டும்; இல்லையெனில், உரிய துறை அதிகாரிகள் பதிலை பெற்று, அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும்.
''இதில் மெத்தனமாக இருக்க கூடாது. இதனால், அரசுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படும். ஆஜராகமால் இருப்பதை எளிதில் கடந்து சென்று விட முடியாது,'' என்றார்.
அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிருந்த ககன்தீப் சிங் பேடி, ''இதுகுறித்து அனைத்து மாநகராட்சிகளுக்கும் உரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
''உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, நேரில் ஆஜராகுவதில் இருந்து அனைவருக்கும் விலக்களித்து உத்தரவிட்டார்.
