ADDED : செப் 29, 2026 02:56 AM
சென்னை: ஆதார் பதிவில் போலி களை கட்டுப்படுத்தும் வகையில், 'பாரத் ஏ.பி.ஐ.எஸ்' எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில், கடந்த 2022 மே மாதம் வரை, 6 லட்சம் போலி ஆதார் அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள 150 கோடிக்கும் அதிகமான மக்களின் தரவுகளை கையாளும்போது, ஒரு நபருக்கு இரண்டு ஆதார் எண்கள் உருவாகவும், இருவருக்கு ஒரே ஆதார் எண் உருவாகவும், வாய்ப்புகள் ஏற்பட்டன. இதை சாதகமாக்கி, பலர் போலி ஆதார் எண்களை உருவாக்கினர்.
இது போன்ற சிக்கல்களை ஆரம்பத்திலேயே தடுக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தனியார் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
அதிக செலவுள்ள மென்பொருள் சரி பார்ப்பில் தவறுகள் ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத் ஐ.ஐ.டி., மற்றும் மிச்சிகன் பல்கலை உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, பேராசிரியர் அனில் ஜெயின், ஒரு பயோமெட்ரிக் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.
இதற்கு, 'பாரத் ஏ.பி.ஐ.எஸ்' என பெயரிடப் பட்டுள்ளது. ஒரு நபரின் விரல் ரேகை, விழித்திரை, முக அமைப்பு ஆகிய மூன்றையும் இணைத்து, 13.5 கே.பி., அளவுள்ள ஒரு 'பயோ மெட்ரிக் டெம்ப்ளேட்டாக' மாற்றும் திறனுள்ளது.
இது, ஒரு வினாடியில், 100 பேருக்கான தகவல்களை ஒப்பிடும் திறன்கொண்டது.
முதற்கட்டமாக, 22 கோடி தரவுகளை சோதித்து, இதன் துல்லியத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால், முதியோர், உடல் உழைப்பாளர்களின் கைரேகை தேய்மானத்தால் ஏற்படும் தகவல் தரவு இழப்புகளை, முக அமைப்பு, விழித்திரை அடையாளங்களுடன் சரிபார்க்கும்.
ஏற்கனவே சந்தையில் உள்ள, வணிக ரீதியான பயோமெட்ரிக் மென் பொருளை விட, துல்லியமாக செயல்படும் இந்த இலவச மென்பொருளை, 2 கோடிக் கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, 160 சிறிய நாடுகள், தங்கள் நாட்டு மக்களின் அடை யாளங்களைக் கண்டறிந்து பாதுகாக்க, இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
