மக்கள் நலனுக்காக நிர்மலாவுடன் சந்திப்பு செங்கோட்டையனுக்கு ஆதரவாக முனுசாமி
மக்கள் நலனுக்காக நிர்மலாவுடன் சந்திப்பு செங்கோட்டையனுக்கு ஆதரவாக முனுசாமி
ADDED : ஏப் 05, 2025 09:41 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் முனுசாமி அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில், பல்வேறு வகை தோல்விகளை மறைக்க, மக்களை திசை திருப்ப, பா.ஜ., அரசை விமர்சிக்கிறார். கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை எதிர்க்கிறார். தொகுதி மறுவரையறை, கச்சத்தீவு பிரச்னை குறித்து, சட்டசபையில் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அதற்கான தீர்மானங்களை சட்டசபையில் கொண்டு வருகிறார்.
தேர்தலுக்கு முன், நீட் தேர்வை, ஒழிக்கும் ரகசியங்கள் உள்ளது எனக்கூறி, பல்வேறு முயற்சிகளை எடுத்து, தோற்று போனவர்கள், தி.மு.க.,வினர். 'கையெழுத்து இயக்கம்' என்ற பெயரில், 30 லட்சம் பேரிடம் பெற்ற, கையெழுத்து கார்டுகள், சேலம் இளைஞர் அணி மாநாட்டில் பறக்க விட்டனர்.
ஓராண்டில், தேர்தல் வருகிறது என்பதால், 'நீட்' தேர்வு குறித்து, நேற்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கதை கூறுகிறார். மக்களை திசை திருப்ப, தங்கள் தோல்விகளை மறைக்க, மீண்டும், தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., அரசை விமர்சிக்கிறார்.
டில்லி சென்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்தார். அவர் கட்சியின் மூத்த முன்னோடி. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காகத்தான், அவர் மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார். அதில் தவறில்லை. இதை வைத்து கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

