முரசொலி அலுவலக நில பிரச்னை: ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
முரசொலி அலுவலக நில பிரச்னை: ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜன 04, 2024 01:16 AM
சென்னை:ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில், 'முரசொலி' அலுவலகம் அமைந்துள்ளதாக அளித்த புகார் குறித்த வழக்கில், தமிழக அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், ஆணையத்தின் தலைவர் சார்பில், இயக்குனர் டாக்டர் சாது ரவிவர்மன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'பஞ்சமி நிலம் தொடர்பான புகார் என்பதால், விசாரணைக்காக எடுக்கப்பட்டது. சிவில் நீதிமன்றத்தின் அதிகாரம், ஆணையத்துக்கு உள்ளது என்பதால், முரசொலி நிலப் பிரச்னையை விசாரித்தோம். இதில், எந்த முடிவையும் எடுக்கவில்லை' என கூறப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அறக்கட்டளை சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்தவர், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல.
''நிலத்தின் உரிமை குறித்து, ஆணையம் முடிவெடுக்க முடியாது. இந்த வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்கட்டும். அதன்பின், என் வாதத்தை தொடர்கிறேன்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதி, 'சட்டத்துக்கு உட்பட்டுதான் ஆணையம் விசாரிக்கும். அதற்காக, உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசு தரப்பில், இன்று ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள்' என்றார்.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமண்லால், வெள்ளி அன்று தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதை நீதிபதி ஏற்கவில்லை.
அரசு தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்வது தொடர்பாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் கருத்து தெரிவித்தார்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர் வில்சன், ''நிலத்தின் தன்மை என்ன என்பதை, வருவாய் துறை தான் தெரிவிக்க முடியும். வழக்கில் அரசும் சேர்க்கப்பட்டுள்ளதால், பதில் அளிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து ஆவணங்களை தாக்கல் செய்ய, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.