sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாற்றுத்திறனாளி கொலை: காதலனுடன் பெண் கைது

/

மாற்றுத்திறனாளி கொலை: காதலனுடன் பெண் கைது

மாற்றுத்திறனாளி கொலை: காதலனுடன் பெண் கைது

மாற்றுத்திறனாளி கொலை: காதலனுடன் பெண் கைது

2


ADDED : மார் 15, 2024 07:47 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:47 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் கவிதா, 50. பார்வையிழந்தவர். கணவர் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் டேனியல் ஆறுமுகம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

சிலைமான் அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் கவிதா தனியாக வசித்தார். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கவிதா இறந்து கிடந்தார்.

இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரித்தனர். நகைக்காக கொலை நடந்தது தெரியவந்தது. கவிதா வீடு அருகே வசிக்கும் கலையரசி, 30, மொபைல் போனை ஆய்வு செய்தபோது, அவருக்கு பழக்கமான எல்.கே.பி.நகர் சிவானந்தம், 21, என்பவருடன் இணைந்து நகைக்காக கவிதைவை கொலை செய்தது தெரிந்தது.

போலீசார் கூறியதாவது: கலையரசி கணவர் இறந்த நிலையில் மகனுடன் தனியாக வசிக்கிறார். இவருக்கும், சிவானந்தத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கலையரசிக்கு கடன் இருந்ததால் கவிதா நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டார். பார்வையற்ற கவிதா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வருவதற்குள் இருவரும் வீட்டினுள் நுழைந்து காத்திருந்தனர்.

கவிதா வீட்டுக்குள் வந்தவுடன் வாயில் துணியை திணித்து நகையை பறித்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் அடிபட்டு மயங்கியதால் கை, கால்களை கட்டிப்போட்டு நகையை பறித்துள்ளனர். இதில் கவிதா இறந்தார். வெளியூர் தப்பிய இருவரையும் கைது செய்தோம். ஏழு பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு கூறினர்.

வேலுார் அருகே தம்பதி தற்கொலை


வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 77; இவர் மனைவி விஜயலட்சுமி, 70; இவர்களுக்கு, 2 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் விஜயலட்சுமிக்கு வயிற்றில் ஆப்பரேஷன் நடந்தது.

இதில், கமலக்கண்ணன், விஜயலட்சுமி இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்தனர். நேற்று முன்தினம் மாலை, இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

அப்போது வந்த மருமகள் உள்ளிட்டோர் இருவரையும் மீட்டு, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அன்றிரவு இருவரும் இறந்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

30 பவுன் தங்க காசு; ரூ 5.20 லட்சம் திருட்டு


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மூனுரைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணவேணி 34. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை கிருஷ்ணவேணி திண்டுக்கல் சென்றார். இவரது பெற்றோர் நீலமலைக்கோட்டைக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றனர்.

இரவு பெற்றோர் திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் தங்க காசு, ரூ.5.20 லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரிந்தது. அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

அண்ணன் மனைவி கொலை; நில பிரச்னையில் கொடூரம்


துாத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றானை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி, 35. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார்.

சின்னமணி துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் குழந்தைகளுடன் வசித்தார். சின்னமணிக்கும், வைரமுத்துவின் தம்பி ராஜேஷ் கண்ணனுக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்னை இருந்தது.

நேற்று காலை சின்னமணி எப்போதும்வென்றான் சென்றிருந்தார். மீண்டும் புதுக்கோட்டை வருவதற்கு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது, அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் தகராறு செய்து சின்னமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் எப்போதும் வென்றான் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காத சிறுவன் கொலை: மாணவர் கைது


தர்மபுரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 10 வயது சிறுவன், அரசு பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், வீட்டருகே விளையாடி கொண்டிருந்தபோது மாயமானார். அப்பகுதி கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், சிறுவனை, மிட்டாரெட்டிஅள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர், கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று, தனியாக நடந்து வரும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த மாணவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், சிறுவனை அழைத்து சென்று, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டபோது, அச்சிறுவன் பெற்றோரிடம் கூறி விடுவேன் என கூறியதால், ஆத்திரத்தில் சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்றது தெரிந்தது.

இதையடுத்து, தர்மபுரி தீயணைப்பு துறையினர், நேற்று முன்தினம் இரவு, கிணற்றிலிருந்து சிறுவனின் உடலை மீட்டனர். பின், பிளஸ் 2 மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டாக்டர் தற்கொலை


தேனி மாவட்டம், கம்பம், சுக்காங்கல்பட்டி தெரு நாட்டுத்துரை மகன் நாட்ராஜ்குமார் 44. இவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து அங்கு மரியா என்ற பெண்ணை 21 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். மாஸ்கோவில் கிளினிக் நடத்தினார். ஏழு ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மனைவி மரியா, 5 பிள்ளைகளுடன் வந்தனர்.

நாட்ராஜ்குமார் வெள்ளரிக்காயை ரஷ்யா, உக்ரைன், எகிப்து நாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்துவந்தார். அந்நாடுகளில் போர் காரணமாக ஏற்றுமதி செய்த வெள்ளரிக்காய்க்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் வெள்ளரிக்காய் வழங்கிய விவசாயிகளுக்கு நிதிநிறுவனத்தில் கடன் பெற்று பணம் வழங்கினார். தாய், தந்தை சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில் மார்ச் 13ல் வீட்டில் உள்ள அறையில் துாக்கில் தொங்கினார். அவரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இறக்கி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். டாக்டர் இறப்பு குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பஸ்சில் சிறுமிக்கு தொல்லை; இளைஞர்கள் இருவருக்கு சிறை


சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தேளி கிராமத்தை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் 34. விஜய் 28, மற்றும் ஒரு சிறுவன். 2015 நவ.23ல் மதுரையில் இருந்து கண்ணாயிருப்புக்கு சென்ற அரசு பஸ்சில் வந்தனர். அந்த பஸ்சில் தேளி கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியும் வந்துள்ளார். முனீஸ்வரன் பஸ்சில் வந்த சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் விஜய் மற்றும் உடன் இருந்த சிறுவனும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பூவந்தி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் முனீஸ்வரன்,விஜய், மற்றும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர். சிறுவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மற்ற இரண்டு பேர் மீதும் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

முனீஸ்வரனுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து வழக்கை நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார். விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. இருவருக்கும் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.10 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், அரசு ரூ. ஒரு லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

போதை கடத்தல் வழக்கில் 'லாக்கப்'பில் தற்கொலை


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலையை சேர்ந்த லாரி டிரைவர் ஷோஜோ ஜோன், 55, எனபவர், பாலக்காடு நகர் அருகே உள்ள காடாங்கோடு வாடகை வீட்டில் இருந்தார்.

கேரளா மாநில கலால் துறை கமிஷனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாலக்காடு கலால் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான படையினர், இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, 2 கிலோ, 'ஹாஷிஷ்' போதைப் பொருளை கைப்பற்றினர்; ஷோஜோ ஜோனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் விற்பனை செய்வதற்காக, கொள்முதல் செய்த இதன் மதிப்பு, 25 லட்சம் ரூபாய் இருக்கும் என்பது தெரிந்தது.

நேற்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்வதற்காக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கலால் துறையின் பாலக்காடு அலுவலக லாக்கப்பில் ஷோஜோ ஜோன், தான் அணிந்திருந்த வேட்டியை பயன்படுத்தி துாக்கிலிட்டு இறந்தார்.

அவர் தானாக துாக்கிட்டுக் கொள்ளும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. எனினும், அவரது மனைவி ஜோதி, தன் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பணியில் கவனமாக இல்லாத, நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த சிவில் கலால் அதிகாரிகளான மது, ரஞ்சித் ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து, கலால் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்குள் ஊடுருவிய 3 இந்தியர்கள் கைது


அமெரிக்காவின் எல்லை நாடான கனடாவில் இருந்து, மூன்று இந்தியர்கள் மற்றும் டொமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஒருவர் என, நான்கு பேர் சரக்கு ரயில் வாயிலாக சமீபத்தில் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். இவர்களில் ஒருவர் பெண்.

அந்த ரயில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பப்பல்லோ நகரில் சென்று கொண்டிருந்த போது, நான்கு பேரும் ஒரு பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதை அங்கு ரோந்து பணியிலிருந்த எல்லை ரோந்து படையினர் பார்த்துவிட்டனர்.

அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். அதில் இந்திய பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற மூவரையும் சிறைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us