ADDED : ஜன 01, 2024 06:29 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பட்டியலின வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஜாதி ரீதியாக நடந்த கொலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீஸ் நடவடிக்கை கோரி திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பாண்டியன் மகன் முத்து பெருமாள் 25. திருநெல்வேலியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
நேற்று காலை 9:00 மணிக்கு திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே சென்றபோது வழிமறித்த மூன்று பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
இது தொடர்பாக கருங்குளம் அருகே காரசேரியைச் சேர்ந்த முத்து, இசக்கி ஆகிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
இறந்த முத்து பெருமாள் பட்டியலினத்தை சேர்ந்தவர். கைதான மற்றும் தேடப்படுபவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். திருநெல்வேலியில் ஏற்கனவே நடந்து வரும் ஜாதி கொலைகளின் பின்னணியில் இதிலும் ஜாதி ரீதியான மோதல் உள்ளதா என போலீசார் விசாரித்தனர். இரு தரப்பினர் ஊர்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளன. எனவே அவர்களுக்குள் வேறு முன் விரோதம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
இதில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கொலை செய்யப்பட்ட முத்துபெருமாளின் உறவினர்கள், கிராமத்தினர் புளியங்குளம் அருகே திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்பட்ட நிலையில் அங்கும் போராட்டங்கள் தொடர்ந்தன. இதனால் திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் சிரமப்பட்டனர். போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.