தமிழகத்தை உலுக்கிய சமூக ஆர்வலர் கொலை; குற்றவாளிகளுக்கு 15 நாட்கள் சிறைக்காவல்
தமிழகத்தை உலுக்கிய சமூக ஆர்வலர் கொலை; குற்றவாளிகளுக்கு 15 நாட்கள் சிறைக்காவல்
UPDATED : ஜன 20, 2025 02:25 PM
ADDED : ஜன 20, 2025 11:36 AM

புதுக்கோட்டை: சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக குரல் கொடுத்த ஜெகபர் அலியை லாரி ஏற்றி கொலை செய்த வழக்கில், குவாரி உரிமையாளர் ராசு உள்ளிட்ட 4 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி. இவர், திருமயம் பகுதிகளில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். சில தினங்களுக்கு முன், இவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.,. பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்நிலையில், குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசி ஆகியோரை 15 நாட்கள் சிறையில் அடைக்க, திருமயம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.