ADDED : பிப் 18, 2024 07:10 AM

திருநெல்வேலி, : மணல் கடத்தலுக்கு எதிராக புகார் செய்ததால் முறப்பநாட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி லுார்து பிரான்சிஸ் மகன் நீதிபதி தேர்வில் தேர்வாகிஉள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் லுார்து பிரான்சிஸ். தாமிர பரணி ஆற்றில் மணல் கடத்தலுக்கு எதிராக புகார் செய்ததால், 2023 ஏப்., 25ல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், 57 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 143வது நாளில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு துாத்துக்குடி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
லுார்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசு வடியான், 24, தன் தந்தை கொலை வழக்கில் அவர் தான் புகார் அளித்திருந்தார். இவர், 2022ல் சட்டப்படிப்பை முடித்தார்.
சமீபத்தில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் தேர்வில் அவர் தேர்வாகியுள்ளார். துாத்துக்குடி அருகே சூசைப்பாண்டியாபுரத்தில் உள்ள மார்ஷல் வீட்டிற்கு சென்ற எஸ்.பி., பாலாஜி சரவணன் அவரை பாராட்டினார்.